தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ கடந்த ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம்.
படம் பொங்கலுக்கு ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை இயக்குநர் நெல்சன் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், விஜய்யின் மக்கள் இயக்கம், ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் கட்சியாக மாறுகிறது என்றும், கட்சியின் பெயரை தலைமை தேர்தல் ஆணையத்தில் விஜய் பதிவு செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்தது. பின், விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்ய நான் தான் விண்ணப்பித்துள்ளேன். இது என்னுடைய முயற்சி தான், விஜய்யின் அரசியல் கட்சி அல்ல” என்று கூறியிருந்தார்.
தற்போது, இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இன்று என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகா் ஓா் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் அவர் அரசியல் தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
மேலும், எனது ரசிகர்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொள்ளவோ, கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.