தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் நடித்த ‘லியோ’ கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 19-ஆம் தேதி ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’-ஐ (The Greatest of all Time) பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்குகிறார். இதில் விஜய் டபுள் ஆக்ஷனில் வலம் வரப்போகிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் “‘தமிழக வெற்றி கழகம்’ என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
வரும் 2026 சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு” என்றும் “‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்துக்கு பிறகு தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட இன்னோரு படத்தில் மட்டும் நடிப்பேன்” எனவும் கூறியிருந்தார்.
சமீபத்தில், விஜய்யின் 69-வது படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘RRR’ படத்தை தயாரித்த D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரிக்கவிருப்பதாகவும், இதனை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது. தற்போது, இந்த படத்துக்காக நடிகர் விஜய்க்கு ரூ.200 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.