டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது இவர் நடிப்பில் ‘அயலான், மாவீரன்’, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘மாவீரன்’ படம் இன்று (ஜூலை 14-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.
இந்த படத்தை ‘மண்டேலா’ புகழ் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் மிஷ்கின், சுனில், சரிதா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் வரும் ஒரு ஸ்பெஷல் வாய்ஸ் ஓவருக்கு முன்னணி நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார்.
இதனை ‘சாந்தி டாக்கீஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். தற்போது, இன்று காலை சென்னையில் உள்ள திரையரங்கிற்கு சென்று இப்படத்தின் FDFS-வை தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யின் மனைவி சங்கீதா பார்த்து ரசித்ததாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.