சர்ச்சைக்குள்ளான விஜய் சேதுபதியின் திரைப்படம்- அறிக்கை வெளியிட்ட பட குழு!
October 17, 2020 / 10:17 AM IST
|Follow Us
சென்ற வருடம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் கதையை பயோபிக்காக எடுக்கப் போவதாகவும், அந்தப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்றும் செய்தி வெளியாகியது.
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று கதையை எடுக்கும் இந்த படத்திற்கு ‘800’ என்று பெயரிடவுள்ளார்கள். இது முத்தையா முரளிதரன் எடுத்த மொத்த விக்கெட்களின் எண்ணிக்கையாகும்.
நேற்று இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த மோஷன் போஸ்டர் மூலம் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையுடன் சேர்ந்த அவரது விளையாட்டைப் பற்றிய கதையாக இந்த திரைப்படம் அமையும் என்று தெரிகிறது.
தற்போது முத்தையா முரளிதரன் சிங்கள மக்களுக்கு ஆதரவானவர் என்றும், அவருடைய வாழ்க்கை வரலாற்று கதையில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்றும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதை குறிக்கும் விதமாக #shameonVijaysethupathy என்ற ஹேஷ்டேக்கை டிரண்டிங் செய்து வருகின்றனர்.
தற்போது இந்த சர்ச்சை குறித்து திரைப்படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இந்த திரைப்படம் அரசியலாக்கபடுகிறது, ஆனால் இந்த கதை முழுக்க முழுக்க கஷ்டப்பட்டு முன்னேறிய ஒரு சிறுவனின் கதையை பற்றி மட்டுமே அமைந்துள்ளது என்றும் இதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும் தெளிவு படுத்தியுள்ளார்கள்.