துருக்கியில் தொடங்கிய விஜய் சேதுபதி திரைப்பட ஷூட்டிங்!
August 11, 2020 / 10:50 AM IST
|Follow Us
தமிழில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதி தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் தற்போது நடித்து வருகிறார். தமிழில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் “மாஸ்டர்” படத்தில் நடித்துள்ளார்.
இது மட்டுமன்றி “கடைசி விவசாயி” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், உப்பன்னா தெலுங்கு படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
தமிழில் சீனு ராமசாமி இயக்கத்தில் “மாமனிதன்”, “லாபம்”, “கா பே ரனசிங்கம்”, “யாதும் ஊரே யாவரும் கேளீர்”, “துக்ளக் தர்பார்”, “காத்துவாக்குல ரெண்டு காதல்” ஆகிய திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
தற்போது அத்வைத் சந்தன் இயக்கத்தில் ஆமிர் கான் நடிப்பில் உருவாகிவரும் “லால் சிங் சத்தா” என்ற இந்தி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சில படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் விஜய் சேதுபதி நடித்துக் கொண்டிருக்கும் “லால் சிங் சத்தா” படத்தின் படப்பிடிப்பு தற்போது துருக்கியில் தொடங்கப்பட்டுள்ளதாம்.
இதன் படப்பிடிப்புக்காக ஆமிர்கான் மற்றும் படக்குழுவினர் துருக்கி சென்றுள்ளதாக, அங்கிருந்து ஆமிர் கான் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மூலம் தெரிகிறது.
ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் “பாரஸ்ட் கேம்ப்”. இந்த திரைப்படம் 1994ஆம் வருடம் வெளியாகி 6 ஆஸ்கர் விருதுகளை பெற்றது. இந்த படத்தின் கதைதான் இந்தியில் தற்போது “லால் சிங் சத்தா” என்ற படமாக ஆமிர் கான் தயாரித்து நடிக்கிறார்.
இதில் ஆமிர் கானுடன் கரினா கபூர், விஜய் சேதுபதி, மோனா சிங் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். லாக்டவுனிற்கு முன் டெல்லி, ராஜஸ்தான், சண்டிகர், கேரளா, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்துள்ளது.
தற்போது இதன் ஷூட்டிங் துருக்கியில் நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் அன்று வெளியாகவிருந்த இந்த திரைப்படம் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.