சென்ற வருடம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் கதையை பயோபிக்காக எடுக்கப் போவதாகவும், அந்தப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்றும் செய்தி வெளியாகியது.
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று கதையை எடுக்கும் இந்த படத்திற்கு ‘800’ என்று பெயரிடவுள்ளார்கள். இது முத்தையா முரளிதரன் எடுத்த மொத்த விக்கெட்களின் எண்ணிக்கையாகும்.
இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வந்தது. இந்த மோஷன் போஸ்டர் மூலம் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையுடன் சேர்ந்த அவரது விளையாட்டைப் பற்றிய கதையாக இந்த திரைப்படம் அமையும் என்று தெரிந்தது.
முத்தையா முரளிதரன் சிங்கள மக்களுக்கு ஆதரவானவர் என்றும், அவருடைய வாழ்க்கை வரலாற்று கதையில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்றும் கடும் எதிர்ப்பு எழுந்து, பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இதைத்தொடர்ந்து இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி வந்தது. பலர் இவரை இந்த படத்திலிருந்து விலகிக் கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து இதற்கான முடிவை தற்போது விஜய்சேதுபதி அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் முத்தையா முரளிதரன் தானாக முன்வந்து இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க மாட்டார் என்றும் தன்னுடைய கதையில் நடிப்பதால் அவருக்கு இருக்கும் மதிப்பு எவ்விதத்திலும் குறைய தான் விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார். இதன் மூலம் இந்த படத்தில் விஜய்சேதுபதி கண்டிப்பாக நடிக்க மாட்டார் என்பது உறுதியாக தற்போது தெரிந்துள்ளது.
முத்தையா முரளிதரனின் இந்த அறிக்கையை வெளியிட்டு “நன்றி வணக்கம்” என்று விஜய்சேதுபதி குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் இவர் இந்த சர்ச்சையான விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பதை இலைமறைகாயாக தெரிவித்துள்ளார்.