கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். கோப்ரா இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள நிலையில், பொன்னியின் செல்வன் எப்போது முடியும் என்றே தெரியாத நிலையில் உள்ளது.
இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன கதை விக்ரமுக்கு ரொம்பவே பிடித்துவிட்டதால், பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ‘கோப்ரா’ படத்தைத் தயாரித்து வரும் லலித் குமார், கார்த்திக் சுப்புராஜ் – விக்ரம் படத்தையும் தயாரிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துக்கொண்டே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்க விக்ரம் முடிவு செய்துள்ளார். தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தின் பணிகளை முழுமையாக முடித்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ் தற்போது விக்ரம் படத்திற்கான கதையை எழுதும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.