‘காமெடி’ என்று சொன்னாலே சூரியின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் சூரி பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம். டைமிங் காமெடி மற்றும் டயலாக் மாடுலேஷன் தான் சூரியின் ஸ்பெஷல். சூரி திரையுலகில் என்ட்ரியான போது சில படங்களில் தனக்கு கிடைத்த சின்ன ரோலில் தான் நடித்து வந்தார்.
இப்படி சென்று கொண்டிருந்த சூரியின் கிராஃப் டக்கென உயரத்திற்கு சென்றது ‘வெண்ணிலா கபடிகுழு’ படத்தால் தான். ‘பரோட்டா’வை பார்த்தாலே ‘வெண்ணிலா கபடிகுழு’வில் வரும் பரோட்டா சீன் தான் மைண்டுக்கு வரும். இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு சூரிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து சூரியின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது சூரி நடிப்பில் பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், சூரிக்கு விஷ்ணு விஷாலின் ‘வீரதீரசூரன்’ என்ற படத்தில் நடித்ததற்கு இன்னும் ரூ.40 லட்சம் சம்பளம் பாக்கி வைத்திருப்பதாகவும், அதற்கு பதிலாக நிலம் வாங்கி தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும், விஷ்ணு விஷாலின் அப்பா ரமேஷும் கூறி மேலும் ரூ.2.70 கோடி மோசடி செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக அடையார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் சூரி. தற்போது, இப்புகார் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சிகரமாகவும், வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது. உண்மையில் திரு.சூரி, விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தர வேண்டும்.
“கவரிமான் பரம்பரை” என்ற படத்துக்காக 2017-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் இதுபற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது. நாங்கள் சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம். உண்மை வரும் வரை ரசிகர்களும், நல விரும்பிகளும் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும், உண்மையான தகவல்களுடன் இதுபற்றி செய்தி வெளியிட வேண்டும் என்று ஊடகங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். எல்லாம் தெளிவான பிறகு சட்டப்படி சரியான நடவடிக்கையை நான் எடுப்பேன்” என்று கூறியுள்ளார்.
ITS EASY TO ACCUSE OTHERS
HARDER TO CHECK ON YOURSELF
– BLESS#MOMENTOFTRUTH#உண்மைஒருநாள்வெல்லும் pic.twitter.com/nXaV7bLM9E— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) October 9, 2020