தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக அஜித் மற்றும் விஜய் உள்ளனர் . இரண்டு நட்சத்திரங்களின் படமும் வெளியாகும்போது அவரது ரசிகர்கள் பண்டிகை தினம் மாதிரி கொண்டாடி தீர்ப்பார்கள் . தற்போது வருகின்ற பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படம் ஒரே நாளில் வெளியாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை இந்த 2 படங்களும் சரிபாதியாக பிரித்துக்கொள்ள உள்ளன என்று செய்திகள் வெளியாகி உள்ளது .
இரண்டு பெரிய கதாநாயகர்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நிலவி வருகிறது. தினம் தினம் சமூக வலைத்தளத்தில் தங்கள் நாயகர் படத்தின் அப்டேட்களையும் , பாடல்களையும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் .
இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், “விஜய் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் ஸ்டாராக இருக்கிறார். அது அனைவருக்கும் தெரியும். அவருக்கு அடுத்த இடத்தில் தான் அஜித் இருக்கிறார். இரண்டு படங்களுக்கும் தலா 400 திரையரங்குகள் ஒதுக்குவது சரியாக இருக்காது.
துணிவு திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டுமென பேசப்போகிறேன்” என்று கூறி இருந்தார் . இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது . மேலும் இவரின் இந்த பேச்சுக்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் .
பிறகு இது குறித்து விளக்கம் அளித்த தில் ராஜு ” “ஊடகங்கள் முன் பேச பயப்படுகிறேன்.. 45 நிமிட பேட்டி கொடுத்தேன்.. 20 நொடி வீடியோ கிளிப்பிங்கை வைத்து சர்ச்சையை உருவாக்காதீர்கள்.. நான் யாரையும் பாராட்டவில்லை, தரம் தாழ்த்தவில்லை.. எல்லா நல்ல படங்களையும் ஆதரிக்கிறேன்.” என்று தெரிவித்து இருந்தார் .
இந்நிலையில் இயக்குநர் பேரரசுவிடம் தில் ராஜு சொன்ன கருத்தை பற்றி கேள்வி கேட்கப்பட்டது . இதற்கு பதில் அளித்த பேரரசு எம் .ஜி .ஆர் – சிவாஜி , ரஜினி – கமல் இவர்களை நாங்கள் சமமாக தான் பார்க்கிறோம் அதே மாதிரி விஜய் – அஜித் இவர்களையும் சமமாகவே பார்க்கிறோம் . இவர்களது படம் ஒரு ஜெயிக்கலாம் தோக்கலாம் இவர்கள் இருவருமே எனக்கு சமம் தான் என்று கூறியுள்ளார் .