நாடு முழுவதும் கொரோனா காரணமாக திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகள் மற்றும் திரைப்படங்களின் ப்ரீ புரொடக்ஷன் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்குவதற்கான அனுமதியை அரசு வழங்கியது.
அதைத்தொடர்ந்து தற்போது சில திரைப்பட படப்பிடிப்புகள் நடப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா துறை மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து திரையரங்குகள் விரைவில் திறக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால் சற்றுமுன் செய்தியாளர்களிடம் பேசிய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு “மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் தற்போதைக்கு தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுவதற்காக வாய்ப்புகள் இல்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பின்னரே திரையரங்குகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும்” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
மேலும் அவர் ” திரைப்படங்கள் OTTயில் வெளியாவதை தடுக்க எந்த சட்டமும் கிடையாது” என்றும் கூறியுள்ளார். இவரின் இந்த அறிக்கை திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து இனி பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.