ஐந்து வருடங்களை நிறைவு செய்கிறது”பாபநாசம்” திரைப்படம்!
July 3, 2020 / 04:17 PM IST
|Follow Us
2015 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “பாபநாசம்”. 2013ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற மலையாள திரைப்படமான “திருஷ்யம்” திரைப்படத்தின் ரீமேக்தான் பாபநாசம்.
மலையாளத்தில் இந்த படத்தின் இயக்குனரான ஜீது ஜோசப் தான் தமிழிலும் இந்த படத்தை இயக்கியிருந்தார். வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் மற்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படத்தை சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
ஜிப்ரான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பாராட்டுதற்குரியதாகவே அமைந்தது. மலையாளத்தில் மோகன்லால் மற்றும் மீனா நடித்திருந்த கதாபாத்திரத்தில் தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் கௌதமி நடித்திருந்தார்கள். இவர்களுடன் நிவேதா தாமஸ், கலாபவன்மணி, எஸ்தர் அனில், ஆஷா சரத் ஆகியோர் நடித்திருந்தார்கள்.
இந்தப் படத்தில் கமல்ஹாசன் சுயம்புலிங்கம் எனும் நடுத்தரவர்க்க கேபிள் டிவி ஆபரேட்டராக நடித்திருந்தார். சுயம்புவின் மூத்த மகளுக்கு IG மகன் பாலியல் தொடர்பான பிரச்சினை தருவது, பின் காணாமல் போவதால் வரும் பிரச்சனையை அவர் எப்படி சமாளிக்கிறார் என்பதை சுற்றி கதைக்கரு அமைந்திருக்கும்.
பாபநாசம் மற்றும் அதை சுற்றிய கிராமப்புறங்களில் இந்த படத்தின் காட்சிகள் மிகவும் அழகாக இடம் பெற்றிருக்கும். மேலும் ஒரு அழகான நடுத்தர வர்க்கத்து குடும்பத்தையும் அவர்களின் ஒற்றுமையையும் படம்பிடித்து காட்டியிருப்பார் இயக்குனர்.
இந்தப் படத்தில் கமலின் நடிப்பு பலமாக அமைந்தது. இந்த படத்தின் முதல் பாகம் அழகாகவும் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாகவும் அமைந்திருந்தது. அதனால் இந்த படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இன்றோடு இந்த படம் வெளிவந்து 5 வருடங்கள் நிறைவு செய்கிறது. முதல் நாளிலேயே இந்த படம் 8 கோடி வசூல் செய்தது என்பது சிறப்பம்சம்.