கேஜிஎஃப் 2 படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் என்றும், அதற்கு முன்பு டிரைலர் எதுவும் வெளியிடப்படாது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நவீன சினிமாத்துறையின் வளர்ச்சிகளில் ஒன்று தான் டிரைலர். ஒரு படத்தில் உள்ள சிறப்பு அம்சங்களை, கதை வெளியாகாத வண்ணம் சில நொடிகளில் வெளியிடுவது தான் டிரைலரின் சிறப்பு. ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டவும், படத்தின் வியாபாரத்தை பெருக்கவும் இவ்வாறு டிரைலர் வெளியிடும் சாங்கியம் கடந்த 15 வருடங்களாக திரைத்துறையில் மிக தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதுவும் மாஸ் ஹீரோக்களின் டிரைலர் என்றால் கேட்கவே வேண்டாம். அந்த டிரைலர் வெளியாகும் நாளை ரசிகர்கள் ஒரு திருவிழாவாக கொண்டாடுவார்கள்.
பாபா, சிவாஜி, விஸ்வாசம், விவேகம், சர்க்கார், பிகில் உள்ளிட்ட படங்களின் டிரைலர்களை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். டிரைலர் வெளியிடும் படங்களும் வணிக ரீதியாக நல்ல வசூல் செய்வதால், அனைத்து தயாரிப்பாளர்களும் இதற்கு பச்சைக்கொடி காட்டினர். டிரைலருக்காகவே காட்சிகளை வைக்கும் பாணியும் திரைப்படங்களில் அதிகரித்தது. இந்த பிரத்யேக காட்சிகள் தங்களுக்கு மாஸ் கூட்டுவதால், பெரிய ஹீரோக்களும் அவ்வாறான காட்சிகளில் விரும்பி நடித்தனர்.
சரி நம்ம கேஜிஎஃப்2 கதைக்கு வருவோம். இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தின், போஸ்டர்கள் மட்டும் வெளியாகி இருந்த நிலையில், படத்தின் டீசர் மற்றும் டிரைலருக்கு ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்தனர். ஹீரோ யாஷ்ஷின் பிறந்தநாளில் டீசர் வெளியாகும் என்று காத்துக்கொண்டிருந்த நிலையில், வாழ்த்து போஸ்டரை மட்டும் படக்குழு வெளியிட்டனர்.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் கௌடா, கேஜிஎஃப்2 படம் நேராக திரையரங்குகளில் ரீலிசாகும் என்றும், அதற்கு முன்பாக டிரைலர்கள் வெளியிடும் திட்டமில்லை என்று கூறியுள்ளார். படக்குழுவினரின் இந்த அறிவிப்பு ரசிகர்களை சோர்வடைய வைத்துள்ளது. பேஷன் என்பது மறுசுழற்சி தான் என்பது போல தொழில்நுட்ப வளர்ச்சியும் அதே போல தான். டிரைலர் கண்டுபிடிக்காத காலக்கட்டத்தில் ரசிகர்கள் எந்த எதிர்ப்பார்ப்புமின்றி படங்களை நேராக சென்று பார்த்து, படத்தை ஒரு வருடம் வரை கூட ஓட வைத்துள்ளனர். அதே முறையை தற்போது கேஜிஎஃப் படக்குழுவினரும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளன்.
இவ்வாறு டிரைலர் வெளியிடாமல் படத்தை ரிலீஸ் செய்வதால் Trollers, Fake Reviewers மற்றும் Spoliers ஆகியோரிடமிருந்து படம் தப்பிக்கும் என்பது தான் இந்த ராஜதந்திர முடிவுக்கு காரணம் என்கிறார்கள் திரைத்துறை முக்கியஸ்தர்கள்.