மீம்களின் கடவுள் என வர்ணிக்கப்படும் வடிவேலுவை அறிமுகப்படுத்தியது டி.ராஜேந்திரன் என்ற செய்தி தற்போது ஆதாரத்துடன் வைரலாகி வருகிறது.
இந்த கொரோனா காலகட்டத்தில் பலரை தனிமையிலிருந்து விரட்டும் மாயக்காரர் தான் வடிவேலு. பலரின் ரத்த அழுத்தமும், மன அழுத்தமும் சீரான நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணம் நகைச்சுவை இளவரசன் வடிவேலு தான். அதுவும் குறிப்பாக இந்த லாக்டவுன் சமயத்தில் வடிவேலு ஒரு வரப்பிரசாதமாக காட்சியளிக்கிறார்.
மீம்கள் தமிழகத்தில் இந்த அளவுக்கு பிரபலமானதற்கு காரணம் வடிவேலு தான். ஒரு பக்க செய்தியை ஒரே முகபாவனையில் கூறும் வடிவேலு, இன்னும் 100 வருடத்திற்கான மீம் டெம்பிளேட் அளித்துள்ளார் என்பது தான் நிஜம்.
ராஜ்கிரணால் திரையுலகிற்கு அடியெடுத்து வைத்த வடிவேலு புகழின் உச்சிக்கு போனது அனைவருக்கும் தெரிந்த கதை தான். ஆனால் தற்போது அப்படம் ரிலீசாவதற்கு முன்பே டி.ராஜேந்தரின் படத்தில் வடிவேலு நடித்துள்ளது வைரலாகி வருகிறது.இதுவரை எந்த பேட்டியிலும் இதுகுறித்து அவர் சொல்லாத நிலையில், தற்போது வீடியோ ஆதாரத்துடன் இந்த செய்தி சமூகவலைதளங்கில் பரவி வருகிறது.
இவர் 1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்திருந்தார். ஆனால் அதற்கு முன்பே 1988 ஆம் ஆண்டு டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த என் தங்கை கல்யாணி என்ற படத்தில் வடிவேலு தோன்றி இருக்கிறார். இதற்குப் பிறகு 3 வருடங்கள் கழித்துதான் என் ராசாவின் மனசிலே படம் வெளியாகியுள்ளது.