உலகநாயகன் என்று அழைப்பதை விட சர்ச்சையின் நாயகன் என்று அழைப்பதே இவருக்கு பொருத்தமாக இருக்கும். சமீபத்தில் தலைவன் இருக்கின்றான் என்ற தலைப்பில் இன்ஸ்டாவில் நேரலை வந்தார் கமல் ஹாசன். இதில் சிறப்பு என்னவென்றால் அந்த நேரலையில் கமலை கேள்வி கேட்க போவது விஜய் சேதுபதி என்று தெரியவர அனைத்து சினிமா ரசிகர்களும் குஷியாகினர். இருவருமே தங்களின் மனதில் பட்டத்தை பேச கூடியவர்கள் என்பது நாம் அறிந்ததே.
இந்நிலையில் விஜய் சேதுபதி கேள்விகளை கேட்க கமல்ஹாசன் சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.இதில் அவர் பேசிய ஒரு விஷயம் பூதாகரமாகியிருக்கிறது. அதாவது, விஜய் சேதுபதி கேட்ட கேள்விக்கு, சகலகலா வல்லவன் போன்று படங்கள் எடுத்தால்தான் காசு பார்க்க முடியும், இல்லன்னா தியாகராஜ சுவாமிகள் மாதிரி பிச்சை எடுக்க முடியாது என கூறியுள்ளார்.
அதாவது விஜய் சேதுபதியின் கேள்விக்கு கமல் ‘சினிமா, டிக்கெட் வாங்கிக் கொண்டு காட்டப்படும் ஒரு வியாபாரம்தானே. தர்மத்துக்கு பாடும் பாட்டு இல்லை. தியாகைய்யர் எப்படி ராமரைப் போற்றி, தஞ்சாவூர் வீதிகளில் பிச்சை எடுத்த்துக்கொண்டு திரிந்தாரோ அப்படி பட்ட கலை இல்லை. எனக்கு கார் வாங்கவேண்டும், எம் ஜி ஆர் சிவாஜி போல ஆகவேண்டும் என ஆசை. அப்போது மக்களை மகிழ்விக்க மாட்டேன் என சொன்னால் என்ன வீம்பு?’ எனப் பதிலளித்தார்.
இந்நிலையில் எப்பொழுதும் தமது இருப்பை காட்டலாம் என்று காத்திருந்த பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா இந்த விவகாரத்தை இறுக்கி பிடித்துக்கொண்டார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘சங்கீத மும்மூர்த்திகளில் முதன்மையானவர் தியாகய்யர். அவரை இழிவாகப் பேசியுள்ள கமல்ஹாசனின் அநாகரீகச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். கர்நாடக இசை பிரியர்கள் இவரை அனைத்து விதங்களிலும் புறக்கணிக்க வேண்டும்.’ எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.