ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மாண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானி சங்கர் ஆகியோரும் இந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தனர்.
படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கிய படக்குழுவினர், பின்னர் ஐத்ராபாத், போபால் உள்ளிட்ட இடங்களில் படமாக்கினர்.அப்போது நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் சிறிய அறுவை சிகிச்சை நடந்ததால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு தொடர்ந்து ஓய்வு எடுத்து வந்த கமல்ஹாசன், ஐனவரி மாதத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
இதைதொடர்ந்து மார்ச் மாதம் 19ஆம் தேதி பூந்தமல்லி பொழுதுபோக்கு பூங்காவில் இரவு நடந்த படப்பிடிப்பின் போது திடீரென கிரேன் அறுந்து விழுந்ததில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன், புரொடக்ஷன் அசிஸ்டென்ட் மது ஆகியோர் உயிரிழந்தனர். படக்குழுவைச் சேர்ந்த 10 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தும் உயிரிழப்பும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து பற்றி நடிகர் கமல்ஹாசன், இது கொடூரமான விபத்து என்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த விபத்தில் கமல், காஜல், ஷங்கர் ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் இயக்குனர் ஷங்கரும் உயிரிழந்தவர்களுக்கு ரூ.1 கோடி கொடுப்பதாக அறிவித்தார். இதுபற்றி அவர், இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தந்த அதிர்ச்சியிலிருந்தும், வேதனையிலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும், இன்னும் மீளவில்லை. மீள முயன்று கொண்டிருக்கிறேன். எவ்வளவோ பாதுகாப்பும், முன்னேற்பாடுகளும் செய்திருந்தும் எதிர்பாராமல் நடந்த அந்த விபத்தை சிறிதும் ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன்’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இதன் ஷூட்டிங் தொடங்கி விட்டது என்றும் காஜல் அகர்வால் நடிக்கும் பாடல் காட்சியின் ஷூட்டிங் வெளிநாட்டில் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று தெரியவந்துள்ளது. கிட்டதட்ட விபத்து நடந்து ஒரு மாதத்துக்குப் பிறகு இந்த படத்தின் ஷூட்டிங் மார்ச் 23 ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா பிரச்னைகள் முடிந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.