தனது இயல்பான நடிப்பால் ரசிகர்கள் ஈர்த்த நடிகர் மோகன்லாலின் 60வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நடிகர் மோகன்லாலுக்கு கேரளா மட்டுமின்றி தமிழ் நாட்டிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவரது நடிப்பும், தமிழ் உச்சரிப்பும் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்தது தான் காரணம். அவர் ஏராளமான தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இருவர் படம் துவங்கி, சென்ற வருடம் வெளிவந்த காப்பான் படம் வரை, இதுவரை ஐந்து தமிழ் படங்களில் அவர் நடித்துள்ளார்.
மோகன்லால் பிறந்தது 1960ஆம் வருடம் மே 21ஆம் தேதி. அவருக்கு இன்று 60 வயது நிறைவடைகிறது. மோகன்லால் கேரளாவின் பத்தனம்திட்ட மாவட்டத்தில் உள்ள இலந்தூர் என்ற இடத்தில் விஸ்வநாதன் நாயர் மற்றும் சாந்தகுமாரி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். பள்ளி படிக்கும் காலத்திலேயே இவருக்கு நடிப்பு மீது அதிக ஆர்வம் இருந்ததால் பள்ளியில் நடைபெற்ற நாடகங்களில் எல்லாம் நடித்துள்ளார். அதன் பிறகு தனது 20வது வயதில் முழு நேர நடிகராக சினிமா துறையில் களமிறங்கினார் அவர். தற்போது நாடே பாராட்டும் நடிகராக வளர்ந்து நிற்கிறார்.
மோகன்லாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து ட்விட்டரில் கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். “முதல் படத்தில் இருந்தே உங்களை பிடிக்கும். நீங்கள் தொடர்ந்து சிறந்த படங்களை கொடுத்து வருவதை பார்த்து பொறாமை பட்டிருக்கிறேன். உங்களுடன் பணியாற்றிய போது இன்னும் அதிகம் பிடித்துவிட்டது. நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்” என தன் பிறந்தநாள் வாழ்த்தை கூறியுள்ளார் கமல்.
Dear Mr.@Mohanlal I liked you from your first film. I envied you for the constant quality of your work, that too with detractors lurking in every turn. I liked you even more when I worked with you. Long live my younger brother.
1980 களில் துவங்கிய மோகன்லாலின் சினிமா பயணம் தற்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவரது படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. இதுவரை சுமார் 200 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார் மோகன்லால். பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.
நான்கு வருடங்களில் அவர் தேசிய விருதை வென்றிருக்கிறார். ஆறு முறைக்கும் மேல் கேரளா அரசு வழங்கும் மாநில விருதுகளையும் அவர் பெற்றிருக்கிறார். தெலுங்கில் ஜனதா கேரேஜ் படத்தில் நடித்ததற்காக அவருக்கு ஆந்திர அரசு வழங்கும் நந்தி விருதுகள் வழங்கி கவுரவித்தது.
இந்தியாவில் நான்காவது உயரிய விருதாக கருதப்படும் பத்மஸ்ரீ விருதை 2001ல் பெற்றார் மோகன்லால். அதன் பிறகு சென்ற வருடம் 2019ல் அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கியது இந்திய அரசு. நாட்டில் மூன்றாவது உயரிய விருது இது.
தற்போது மோகன்லால் கைவசம் மூன்று படங்கள் வைத்திருக்கிறார். “மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்” என்ற வரலாற்று படத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார் மோகன்லால். குஞ்ஞாலி மரக்கார் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படம் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷனில் உள்ளது.
மேலும் திரிஷ்யம் புகழ் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ராம் என்ற படத்தில் மோகன்லால் நடித்து வருகிறார். தமிழ் நடிகை த்ரிஷா தான் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். கொரோன லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த படம் டிராப் ஆகிவிட்டது என சமீபத்தில் தகவல் பரவிய நிலையில் அது வதந்தி என இயக்குனர் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மீண்டும் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார் மோகன்லால். திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் தான் அது. மோகன்லாலின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இந்த படத்தினை பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.