இயக்குனர் மகேந்திரனைப் பற்றி ரஜினிகாந்தின் உருக்கமான ஆடியோ பதிவு!
July 25, 2020 / 03:14 PM IST
|Follow Us
1966 ஆம் வருடம் வெளிவந்த “நாம்மூவர்” படத்தின் மூலம் கதையாசிரியராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மகேந்திரன். கதை ஆசிரியராக அறிமுகமாகி, இயக்குனராக உருவெடுத்து, பின் நடிகராகவும் திகழ்ந்து வந்தார்.
நம்மை விட்டு இரண்டு வருடங்களுக்கு முன் பிரிந்த இந்த சிறந்த கலைஞனின் பிறந்தநாள் இன்று. இவர் பிறந்தநாளையொட்டி இவரது மிக நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகேந்திரனை நினைவுகூர்ந்து ஆடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவை மகேந்திரன் அவர்களது மகன் இயக்குனர் ஜான் தற்போது வெளியிட்டுள்ளார். தமிழில் எண்ணற்ற சிறந்த படங்களை இயக்குனராக தந்த மகேந்திரன், நடிகராக விஜய் நடிப்பில் வெளியான “தெறி”, “சீதக்காதி” மற்றும் ரஜினி நடிப்பில் “பேட்ட” ஆகிய படங்களில் கடைசியாக நடித்திருந்தார்.
கதை ஆசிரியராக இருந்த மகேந்திரன் இயக்குனரான முதல் படம் “முள்ளும் மலரும்”. 1978 ஆம் வருடம் வெளியான இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் ஆரம்பித்து இவர்களுக்கு இடையிலான நட்பு பெரிதாக வளர்ந்தது. இதைத் தொடர்ந்து உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுகள், நெஞ்சத்தை கிள்ளாதே, கை கொடுக்கும் கை, ஊர் பஞ்சாயத்து போன்ற படங்களை இயக்கிய இந்த சிறந்த கலைஞன் 2019 ஏப்ரல் 2ஆம் தேதி தன் இன்னுயிரை நீத்தார்.
இவர் பிறந்தநாளான இன்று அவரது நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உருக்கமாக வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், அவர் கூறியுள்ளதாவது ” முள்ளும் மலரும் படத்தில் எனக்கு கிடைத்த அனைத்து பாராட்டுக்களும் இயக்குனர் மகேந்திரன் அவர்களையே சேரும். அவர் என்னுடைய மிகப்பெரிய நண்பர் மட்டுமல்லாது ஒரு வித்தியாசமான மனிதரும் கூட. என்றுமே பெயர், புகழ், பணத்திற்காக அவர் ஆசைப்பட்டது கிடையாது. அவர் நோக்கங்கள் அனைத்தும் நல்ல படத்தை கொடுப்பதை நோக்கியே இருந்தது. சமீபத்தில் “உதிரிப்பூக்கள்” படத்தை பார்த்தேன், படத்தை பார்த்த மறு நிமிடமே கண்கலங்கி விட்டேன். நாம் அவரை விரைவில் இழந்துவிட்டோம். கடைசியாக “பேட்ட” படத்தில் அவருடன் நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை நினைத்து பெருமைப்படுகிறேன். அவருடன் அதிக நேரம் செலவிடுவதற்கு இந்த படப்பிடிப்பு காரணமாக இருந்தது. அவர் என்னை விட்டுப் பிரிந்து இரண்டு வருடங்கள் ஆனாலும் இன்றும் அவரை நினைத்துக் கொண்டுதான் இருக்கிறேன்” என்று தனது நண்பர் பற்றி கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.