தமிழ் சினிமாவில் ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானதும், இதனைத் தொடர்ந்து ‘கோவில், மதுர, 7/G ரெயின்போ காலனி, திருட்டு பயலே, புதுப்பேட்டை’ போன்ற பல படங்களில் நடித்தார் சோனியா அகர்வால். 2006-ஆம் ஆண்டு இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சோனியா அகர்வால்.
பின், செல்வராகவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் சோனியா அகர்வால். அதன் பிறகு மீண்டும் ‘வானம், தடம், அயோக்யா’ போன்ற சில படங்களில் சோனியா அகர்வால் நடித்தார். சமீபத்தில், சோனியா அகர்வால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.
இப்புகைப்படத்திலும், வீடியோ பதிவிலும் திருமணம் நடப்பது போல் காட்டப்பட்டிருப்பதால், சோனியா அகர்வாலுக்கு இரண்டாவது திருமணமா? என்ற கேள்வி எழுந்தது. இது உண்மையாகவே திருமணம் தொடர்பான அறிவிப்பா? அல்லது அவர் நடிக்கப்போகும் புதிய திரைப்படம் அல்லது சீரியல் குறித்த அறிவிப்புக்கான ப்ரோமோவா? என்று யோசித்து வந்த ரசிகர்களுக்கு சோனியா அகர்வாலே இன்று ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். இவர் ‘Tale of two’ என்ற பெயரில் திருமணம் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை ஃபேஷன் டிசைனர் சிட்னி ஸ்லேடன், இயக்குநர் ஆனந்த் பால்கி, ‘சமையல் சமையல்’ வெங்கடேஷ் பட் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோருடன் இணைந்து துவங்கியுள்ளாராம்.