ட்விட்டரில் அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்… ‘வலிமை’ படக்குழுவினர் வெளியிட்ட அறிக்கை!
December 11, 2020 / 12:20 PM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து கடந்த ஆண்டு (2019) வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.
ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது.
கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங் சென்னையில் துவங்கி சில நாட்கள் தொடர்ந்து நடந்தது. அதன் பிறகு அடுத்த ஷெடியூல் ஷூட்டிங் கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில், அஜித்தின் ரசிகர்கள் ட்விட்டரில் #WeWantValimaiUpdate என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தார்கள்.
தற்போது, இது தொடர்பாக படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “வணக்கம். ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு… படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் திரு. அஜித் குமார் அவர்களும், அனுபவமிக்க தயாரிப்பாளருமான திரு. போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து ‘வலிமை’ படத்தின் அப்டேட் குறித்து முடிவெடுத்து, தகுந்த நேரத்தில் வெளி இடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும், அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும். நன்றி!!!” என்று கூறியுள்ளனர்.