“என் ரஜினி நலமாக இருக்க வேண்டும்”… ரஜினியின் அறிக்கை தொடர்பாக பேசிய கமல்!
December 30, 2020 / 12:00 AM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார். சமீபத்தில், ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில் “ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல.
வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்!!! ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதால், டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறியிருந்தார்.
சமீபத்தில், ஹைதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘அண்ணாத்த’ படத்தின் புதிய ஷெடியூல் ஷூட்டிங்கில் ரஜினி கலந்து கொண்டார். கடந்த வாரம் புதன்கிழமை இப்படக்குழுவினருக்கு ‘கொரோனா’ டெஸ்ட் எடுத்தபோது 4 பேருக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், நடிகர் ரஜினிக்கு டெஸ்ட் எடுத்து பார்த்ததில் நெகட்டிவ் என்று தான் வந்தது. இருப்பினும் படத்தின் ஷூட்டிங்கை உடனடியாக நிறுத்தியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஜினி டிஸ்சார்ஜ் ஆகி சென்னையில் இருக்கும் அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.
இன்று காலை ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்த கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து, பிரச்சாரத்தின் போது என் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என்கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு, மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும். என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள்” என்று கூறியிருந்தார். தற்போது, மயிலாடுதுறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நடிகரும், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவருமான ‘உலக நாயகன்’ கமல் ஹாசன், ரஜினியின் அறிக்கை தொடர்பாக பேசுகையில் “நண்பர் ரஜினியின் அறிக்கையை பற்றி அனைவரும் கேட்பார்கள். கேட்பதற்கு முன்னால் நான் சொல்கிறேன். பிரச்சார பயணம் முடிந்த பிறகு, சென்னை சென்றவுடன் அவரை மீண்டும் சந்திப்பேன். என்னை பொருத்தவரையில் அவர் ரசிகர்களின் மனநிலை தான் எனக்கும். சற்றே ஏமாற்றம் இருந்தாலும், அவருடைய ஆரோக்கியம் எனக்கே மிக முக்கியமான ஒரு விஷயம். என் ரஜினி நலமாக இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும்” என்று கூறியுள்ளார்.