ஆந்தாலஜி படமான ‘ஷ்’… ஃபர்ஸ்ட் லுக்கை ஷேரிட்ட ஆறு பிரபலங்கள்!
January 27, 2021 / 10:02 PM IST
|Follow Us
ஒரு ஹீரோ – ஹீரோயின், அதற்கென ஒரு கதைக்களம் என தொடர்ந்து படங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், பல கதைகளை ஒரே படத்தில் ஒவ்வொன்றாக குறும்படம் போல் சொல்லப்படும் படங்களும் உண்டு. அது ஆந்தாலஜி படம் என்று சொல்வார்கள். இந்த ஆந்தாலஜி படங்களில் வரும் கதைகள் ஒரே ஜானரை மையமாக வைத்து உருவாகலாம், அல்லது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் வேறு ஜானரிலும் கதைகள் இருக்கலாம்.
இதுவரை தமிழில் ‘சிரிக்காதே, சோலோ, 6 அத்தியாயம், சில்லுக் கருப்பட்டி, புத்தம் புதுக் காலை, பாவக் கதைகள்’ போன்ற சில ஆந்தாலஜி படங்கள் வெளியாகி உள்ளது. இப்போது தமிழில் உருவாகி வரும் புதிய ஆந்தாலஜி படம் ‘ஷ்’. இதில் நான்கு குறும்படங்கள் இருக்கிறதாம். இயக்குநர்கள் பிரித்வி ஆதித்யா, வாலி மோகன் தாஸ், ஹரிஷ், கார்த்திகேயன் ஒவ்வொரு குறும்படத்தையும் இயக்கியுள்ளனர்.
இதில் இயக்குநர் பிரித்வி ஆதித்யா இயக்கும் குறும்படத்தில் சோனியா அகர்வால் – மைம் கோபியும், இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கும் குறும்படத்தில் ஐஸ்வர்யா தத்தா – ஹம்ரேஷும், இயக்குநர் ஹரிஷ் இயக்கும் குறும்படத்தில் ஸ்ரீகாந்த் – இனியாவும், இயக்குநர் கார்த்திகேயன் இயக்கும் குறும்படத்தில் க்ரிஷா குருப் – மாறனும் நடித்து கொண்டிருக்கிறார்கள். தற்போது, இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர்கள் ஷாந்தனு – கெளதம் கார்த்திக் – அசோக் செல்வன், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ் – ப்ரியா பவானி ஷங்கர் – ரைசா வில்சன் ஆகியோர் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளனர்.