‘கொரோனா’ இரண்டாவது அலை… பெப்சி சினிமா தொழிலாளர் சங்கத்துக்கு நிதியுதவி வழங்கிய ‘தல’ அஜித்!
May 15, 2021 / 05:04 PM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.
இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
சமீபத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் “#COVIDSecondWave-க்கு எதிரான போரில் நாம் அனைவரும் சேர்ந்து போரிட வேண்டிய நேரம் இது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிடுவீர்! பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். நன்கொடை – செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும்” என்று கூறியிருந்தார். நேற்று நடிகர் அஜித் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கினார். தற்போது, இன்று (மே 15-ஆம் தேதி) தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத்துக்கு (FEFSI) அஜித் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.