“சமந்தாவின் ‘தி ஃபேமிலி மேன் 2’ ஒளிபரப்பை நிறுத்த வேண்டும்”… கொந்தளித்த பாரதிராஜா!
June 7, 2021 / 02:58 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற தமிழ் படமும், ‘சகுந்தலம்’ என்ற தெலுங்கு படமும், ‘தி ஃபேமிலி மேன்’ (சீசன் 2) என்ற ஹிந்தி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸ் கடந்த ஜூன் 4-ஆம் தேதி ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸானது. மனோஜ் பாஜ்பாய் ஹீரோவாக நடித்துள்ள இந்த சீரிஸில் சமந்தா பவர்ஃபுல்லான வில்லி ரோலில் மிரட்டியிருக்கிறார்.
இதனை இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கி உள்ளனர். தற்போது, பிரபல இயக்குநர் பாரதிராஜா ட்விட்டரில் “எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து OTT தளத்தில் வெளிவந்தால் ‘அமேசான்’ நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் “எங்கள் இனத்திற்கு எதிரான ‘தி ஃபேமிலி மேன் 2’ இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும், தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு அத்தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மௌனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
தமிழீழப் போராளிகளின் விடுதலைப் போராட்டக்களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத, தகுதியற்ற, நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன. அறமும், வீரமும் ,தன்னலமற்ற ஈகமும், செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் ,தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும் தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் மாண்புமிகு திரு.பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிட வேண்டும். இத்தொடரில் தமிழ், முஸ்லீம், வங்காளி என குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மனநிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள். ‘தி ஃபேமிலி மேன் 2’ தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து ஓடிடி தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும், புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.