Paruthiveeran : “அமீர் பற்றி ஞானவேல்ராஜா பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது”… இயக்குநர் பாரதிராஜா அறிக்கை!
November 29, 2023 / 11:00 AM IST
|Follow Us
சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் ‘சர்தார் 2’, ‘கைதி 2’ மற்றும் இயக்குநர் நலன் குமரசாமி படம், இயக்குநர் பிரேம் குமார் படம் என 4 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
கார்த்தியின் கேரியரில் மிக முக்கியமான படம், அதுவும் அவர் கதையின் நாயகனாக அறிமுகமான படம் ‘பருத்திவீரன்’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ப்ரியாமணி நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அமீர் இதனை இயக்கியிருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது.
சமீபத்தில், இந்த படத்தை தயாரித்த ‘ஸ்டூடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் அமீர் “‘பருத்திவீரன்’ தொடர்பாகவும், என்னுடைய திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை” என்று குறிப்பிட்டு ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அதன் பிறகு அமீருக்கு ஆதரவாக சசிக்குமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், கரு.பழனியப்பன், சினேகன், சுதா கொங்கரா என சில திரையுலக பிரபலங்கள் குரல் கொடுத்தனர். தற்போது, பிரபல இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் “அமீரின் படைப்புகளையும், அவரின் நேர்மையையும் இழிவுபடுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து, இப்பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும்” என்று குறிப்பிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.