சிக்கலில் சிக்கித் தவித்த சிம்புவின் ‘மாநாடு’… ரிலீஸுக்காக உதயநிதி ஸ்டாலின் செய்த பேருதவி என்ன தெரியுமா?
November 25, 2021 / 06:43 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘மாநாடு’ திரைப்படம் இன்று (நவம்பர் 25-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.
இந்த படத்தில் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷனும், வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் பிரேம்ஜி அமரன், மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
‘V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை ‘SSI புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுப்பையா ரிலீஸ் செய்துள்ளார். தற்போது, இப்படம் ரசிகர்களிடமும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஆனால், நேற்று இரவு வரை இப்படம் வெளியாவதில் சிக்கல் இருந்தது. நேற்று மாலை கூட படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதன் பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் ‘மாநாடு’ வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” என்று கூறியிருந்தார்.
‘மாநாடு’ படத்துக்கு ஃபைனான்ஸ் செய்த உத்தம் சந்திற்கு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தின் ரிலீஸுக்கு முன்பு பணம் தருவதாக இருந்தது. ஆனால், அப்பணத்தை தயாரிப்பாளரால் சொன்னபடி கொடுக்க முடியாமல் போகவே ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் இதன் சேட்டிலைட் ரைட்ஸை ரூ.6 கோடிக்கு ‘கலைஞர் டிவி’ சார்பில் கைப்பற்றினார்.
பின், டிஜிட்டல் ரைட்ஸை ‘சோனி லைவ்’ வாங்குவதற்காக மதுரை அன்புச்செழியன் ரூ.10.5 கோடி கடனாக கொடுத்தார். அதன் பிறகு சிலம்பரசனின் புதிய படமான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ரூ.3 கோடியும், சிலம்பரசனின் அம்மா உஷா ரூ.3 கோடியும் கொடுத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக கோலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.