Trisha & Mansoor Ali Khan : “எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு”… மன்சூர் அலிகான் வெளியிட்ட அறிக்கை!
November 24, 2023 / 02:58 PM IST
|Follow Us
பிரபல நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடிக்க என்னை அணுகியபோது த்ரிஷாவுடன் பெட்ரூம் காட்சி இருக்கும் என்று நினைத்தேன். அவரை அப்படியே கையில் தூக்கிக் கொண்டு போவேன் என்று எண்ணினேன். நான் எத்தனை படத்துல அதுபோன்ற கற்பழிப்பு காட்சிகளில் நடித்திருக்கிறேன்” என்று பேசியிருந்தார்.
இவர் பேசியதை கேட்டதும் நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து ட்வீட் போட்டனர். மேலும், இந்த விஷயம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது, நடிகர் மன்சூர் அலிகான் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “நான் சொல்ல வருவது என்னவென்றால்… அடக்க நினைத்தால் அடங்க மறு!!!. இப்ப சொல்கிறேன் எனை மன்னித்துவிடு! ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி? பெற்றுவிட்டேன்!
எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந்தது. லட்சக்கணக்காணோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து. அஹிம்சையை தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன். காவல் அதிகாரி அம்மையார் த்ரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, ‘ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்’ என வந்துவிட்டேன். யதார்த்த நிலை!
சட்டம் வென்று வெளியே வந்தால், மீண்டும் கோரப்பசியுடன் கோழிக் குஞ்சை கவ்வ வரும் வல்லூறுகளாக ஊடகம் துரத்துகிறது!! ஜனநாயகத்தின் நான்காவது தூண்,. மணிப்பூர், ஹாத்ரஸ் பெண் பல்கீஸ் பானு, நீட் அனிதாக்கள், வாச்சாத்தி வன் கொடுமைகள் நித்தம் மதக்கலவர வன்கொடுமைகளை சாட்டையடியாக கேள்வி கேட்க மறுக்கிறது. எனது இளமைக்காலம் யாவும் திரைத்துறையில் இழந்து விட்டேன். திமிங்கலமாக உலா வந்தாலும், பாத்திரங்கள் சிறு மீன்களாகத்தான் அமைந்தது. இனி வரும் நாட்களாவது ஆக்கபூர்வமாக உழைக்க இறைவா சக்தியை கொடு!
என் மக்கள், மலடான பளபளக்கும் ரசாயண உரமேற்றப்பட்ட காய்கறிகளை உண்டு, விவசாயிகள் வீணர்களாக ஆக்கப்பட்டு, விளை நிலங்கள் கரிக்கட்டைகளாக மாறும். கனிமங்கள், மலை, ஆறு காணடிக்கப்பட்டு, வேலையற்றவர்களாய் நிற்கிறோம். குழந்தைகள் கசடறகற்க, சூரியன் மறையும் முன் குடும்பம் காக்க மாங்குமாங்கு என்று உழைப்போம். மாதத்தில் 10 நாள் கடுமையாக உழைத்தால்தான் கரண்ட் பில் கட்ட முடியும். மீதி நாள் GST, ST, டோல்கேட், பெட்ரோல், கேஸ், ஸ்கூல் பீஸ், மளிகை வாங்க என, ஒன்றும் மிஞ்சமாட்டேங்கிறது. இன்னும் கடுமையாக ஏதாவது சம்பளத்துக்கு வேலை செய்தால்தான் நாம் அதானிக்கு கப்பம் கட்ட முடியும்.
பெண்ணிலிருந்து தான் மனிதன் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது; தாய்க்கு சேவை செய் என்றார் நபிகளார். பெண்மை புனிதம். காரணத்தோடு தான் ஆண்மையை அழியுங்கள் என்றார் பெரியார். எனை ஈன்ற சபூரா மாள் பாம்புக்கடி, பூரான், தேள் கடித்து வருவோர்க்கு 8 வேளை தொழுது, ஓதி, ஊதி, கிராம்பு நீர் கொடுத்து, நற்கிருபைகள் செய்தவர். சினிமா பார்க்கவிடாது 10-ஆம் வகுப்புவரை வளர்த்தவர். இனிமேலும் இம்மண்ணின் மீட்சிக்கு, சகோதரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா!! இறையச்சமே நம் குழந்தைகளின் நல்வாழ்க்கையை அருளும்! எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு. இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்” என்று கூறியுள்ளார்.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus