தமிழ்சினிமாவில் ஆர்யா நடிப்பில் வெளியான “பாஸ் என்கிற பாஸ்கரன்” படத்தில் அவரது அண்ணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை விஜயலட்சுமி. அவர் விஜய், சூர்யா நடிப்பில் வெளியான “ஃபிரண்ட்ஸ்” படத்தில் அறிமுகமானார்.
இதில் மட்டுமல்லாது சில தமிழ் படங்களிலும், கன்னட படங்களிலும் நடித்து வந்தார் விஜயலட்சுமி. இவர் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவில் அவர், தான் தற்கொலை செய்து கொள்வதற்கு இந்த இரு நபர்கள் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்கள் பெயரையும் அவர் இந்த வீடியோவில் பதிவு செய்துள்ளார். தன் மரணத்திற்கு இந்த இருவர் தான் காரணம் என்றும் அவர்களுக்கு தான் இறந்துவிட்டபின் முன்ஜாமீன் கொடுக்க யாரும் அனுமதிக்கக்கூடாது என்று உருக்கமாக பேசியிருந்தார். “நான் ரொம்ப நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் இவர்களால் என்னால் வாழ முடியாமல் போய்விட்டது” என்றும் கூறியிருந்தார். இந்த வீடியோவில் பேசும் பொழுதே தான் அதிக பீபி மாத்திரைகளை எடுத்து விட்டதாகவும் தற்போது தான் இறந்து வருவதாகவும் கூறியிருந்தார்.இந்த வீடியோவை இவர் வெளியிட்ட முதலே பரபரப்பாக இணைதளம் முழுவதும் பரவியது.
இந்த நிலையில் தற்போது நடிகை விஜயலட்சுமி அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வெளியானது. இதையடுத்து நடிகை விஜயலட்சுமி மருத்துவமனையிலிருந்து தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் “உங்கள் அனைவரது அன்பாலும் ஆசீர்வாதத்தாலும் நான் குணமடைந்து வருகிறேன். என்னை எல்லோரும் காப்பாற்றி விட்டார்கள். நான் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்றபின்னும் என்னைப் பற்றி இன்னும் அரசியல் உள்நோக்கத்துடன் பலபேர் தவறான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். தயவுசெய்து இந்த நேரத்திலும் எனக்கு இப்படி மனவுளைச்சலை கொடுக்காதீர்கள். தவறான கருத்துக்களை பரப்பாதீர்கள். நாம் மனிதாபிமானமின்றி நடந்து கொள்ளக் கூடாது. எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றி. விரைவில் குணமடைந்து நான் வீடு திரும்புவேன். நான் தற்கொலை செய்ததுபோல ட்ராமா பண்ணவில்லை. எவ்வளவு கோடி கொடுத்தாலும் யாரும் இப்படி ஒரு செயலை செய்ய மாட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.