சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் மஞ்சள் சேலையை காதலிக்க வைத்தவர் இயக்குநர் மிஷ்கின். அஞ்சாதே, துப்பறிவாளன், யுத்தம் செய், சைக்கோ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். துப்பறிவாளன் வெற்றிக்குப் பிறகு, அதே கூட்டணியுடன் இயக்குநர் மிஷ்கின் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார்.
லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படத்திலிருந்து விலகினார். துப்பறிவாளன் 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பை விஷால் இயக்க இருக்கிறார். தற்போது, கரோனா ஊரடங்கில் தான் 11 கதைகளை எழுதி முடித்து விட்டதாக இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, நான் புத்தகம் படிப்பதற்கு அதிக நேரம் செலவிட்டு வருகிறேன். அதுமட்டுமில்லாமல், இந்த இரண்டு மாத ஊரடங்கில் 11 கதைகளை எழுதி முடித்துவிட்டேன். சமீபத்தில் நடிகர் சிம்புவை சந்தித்து கூறிய கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவர் நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு தனது படத்தில் பணியாற்றுவார் என தெரிவித்தார். இதனையறிந்த சிம்பு ரசிகர்கள் மிகவும் குஷியாக உள்ளனர்.