அத்தனை கலைஞர்களும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறோம், வந்துருடா பாலு… பாரதிராஜா அழுதபடி பேசிய உருக்கமான வீடியோ! தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகராக வலம் வருபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் இதுவரை 16 இந்திய மொழிகளில் 40000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இவர் ‘கேளடி கண்மணி, திருடா திருடா, காதலன், நாணயம்’ போன்ற பல படங்களில் நடிகராகவும் வலம் வந்திருக்கிறார்.
சமீபத்தில், ‘கொரோனா’வால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவ குழுவினர் இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர். நேற்று, எஸ்.பி.பாலசுப்ரமணியமின் மகன் சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் “அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் சிகிச்சையால் அவரது உடல்நலம் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது. அப்பா சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கும் அனைவருக்கும் நன்றி” என்று பேசியிருந்தார்.
தற்போது, இது தொடர்பாக பிரபல இயக்குநர் பாரதிராஜா வெளியிட்ட வீடியோவில் “‘இது ஒரு பொன்மாலைப் பொழுது இன்றளவும் உலகமே கேட்டு வியந்து போகின்ற ஒரு பாடல். வைரமுத்து எழுதிய இப்பாடலை நீ பாடலாம். ஆனால், உனக்கு பொன்மாலைப் பொழுது வரக்கூடாது. உனக்கு பொன்காலைப் பொழுது தான் வரணும். பாலு நான் மட்டுமில்லடா, உலகத்திலுள்ள அத்தனை கலைஞர்களும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறோம்.
இரண்டு நாட்களாக நான் விட்டக் கண்ணீர் என் கன்னங்களில் வழியும் போது, அதை துடைத்து துடைத்து எறிந்துக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது கூட இந்தப் பதிவில் அது வந்துவிடக் கூடாது என்று நான் நிதானமாகப் பேச முயற்சிக்கிறேன். பாலு வந்துருவடா.. நான் வணங்குகின்ற பஞ்ச பூதங்கள் நிலம், நீர், காற்று, விண்வெளி அத்தனையும் உண்மையென்றால் நீ மறுபடியும் வருகிறாய், எங்களோடு பழகுகிறாய். இன்னும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடுகிறாய். நீ ஒரு ஆண் குயில். வந்துருடா பாலு!” என்று அழுதபடி பேசியுள்ளார்.