சினிமா வரலாற்றில் இது “கருப்பு தமிழ் புத்தாண்டு..”
April 22, 2020 / 08:15 PM IST
|Follow Us
தமிழ் புத்தாண்டு தமிழர்களின் பண்பாட்டையும் கலாச்சாராத்தையும் பறைசாற்றும் ஒரு பண்டிகையாக இருந்தாலும், அதனை மேலும் சிறப்பாக்குவது சினிமாத்துறை. கடந்த பல தசாப்தமாக தமிழ் புத்தாண்டை கொண்டாடும் விதமாக பல திரைப்படங்கள் வெளிகியுள்ளன. எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி தனுஷ் சிம்பு காலம் வரை பல படங்கள் தமிழ் புத்தாண்டில் வெளியாகி சாதனை படைத்துள்ளன.
ஆனால் யாரும் எதிர்ப்பாராத வகையில் இந்தாண்டு தமிழ் புத்தாண்டு கருப்பு புத்தாண்டாக மாறியுள்ளது. தமிழ் திரையுலகிற்கு மட்டுமில்லாமல் இந்திய சினிமாத்துறைக்கும், ஏன் உலக சினிமாத்துறைக்கே இந்த காலக்கட்டம் கருப்பு தினங்களாக மாறியுள்ளன. சில லட்சம் ரூபாய் மதிப்புள்ள படங்கள் தொடங்கி பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள படங்களும் வெளியாகாமல் முடங்கியுள்ளன. உலகம் முழுவதும் இந்த காலக்கட்டத்தில் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை என்பது சரித்திரத்தில் இடம்பிடித்து விட்டது. காரணம் கொரோனா…….!, விஜய்யின் மாஸ்டர் படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், கொரோனாவால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. மாஸ்டருக்கு மட்டுமல்ல, அஜித்தின் வலிமை, ரஜினியின் அண்ணாத்த ஆகிய படங்களுக்கும் இதே நிலைதான்.
கொரோனா இதே வேகத்தில் நீடித்தால் 2021 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டில்தான், ரிலீசாகாமல் முடங்கி இருக்கும் எஞ்சிய படங்கள் வெளியாகும். மாஸ் ஹீரோக்களின் படங்களுக்கே இந்த நிலை என்றால், பட்ஜெட் படங்கள் மற்றும் சிறு பட்ஜெட் படங்களின் நிலை படுமோசமாக உள்ளன. 50க்கும் மேற்பட்ட சிறு பட்ஜெட் படங்கள் தற்போது ரிலீசாக வரிசையில் காத்துக்கொண்டிருக்கிறது. இனி மாஸ் ஹீரோ படங்கள் ரிலீசாகி, அதன்பின் தியேட்டர்களில் இடம் ஒதுக்கப்பட்டால் தான் சிறு பட்ஜெட் படங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதனால் எதிர்வரும் 6 மாதங்களுக்கு சிறு படங்களுக்கு இந்த வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்காது என்பது தான் நிதர்சனம்.
இது தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு மட்டும் கருப்பு புத்தாண்டு இல்லை, சினிமாவை நம்பி இருக்கும் தொழில்நுட்பத்துறை கலைஞர்கள், உதவி இயக்குனர்கள் முதல் போஸ்டர் ஒட்டும் தொழிலாளர்கள் வரை.. ஏன் கோடான கோடி ரசிகர்கள் அனைவருக்கும் இது கருப்பு தமிழ் புத்தாண்டுதான்.