“40 கதைகள் கேட்டு தூங்கிட்டேன்”னு சொன்னதால் வெடித்த சர்ச்சைக்கு விளக்கமளித்த அஷ்வின்!

தமிழ் சினிமாவில் ‘நெருங்கி வா முத்தமிடாதே, எனை நோக்கி பாயும் தோட்டா, ஜூலை காற்றில், ஆதித்ய வர்மா, இந்த நிலை மாறும், ஓ மணப்பெண்ணே’ போன்ற படங்களில் சிறிய ரோலில் நடித்தவர் அஷ்வின் குமார். இது தவிர ‘ஆஃபீஸ், நினைக்க தெரிந்த மனமே, ரெட்டைவால் குருவி’ போன்ற டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

அதன் பிறகு அஷ்வின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ சீசன் 2-வில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இப்போது இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் ஹீரோவாக அவதாரம் எடுத்து நடிக்கும் முதல் தமிழ் படம் ‘என்ன சொல்ல போகிறாய்’.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஹரன் இயக்கியுள்ளார். இதில் அஷ்வினுக்கு ஜோடியாக தேஜூ அஷ்வினி, அவந்திகா மிஸ்ரா என டபுள் ஹீரோயின்ஸாம். மேலும், காமெடியில் கலக்க ‘குக் வித் கோமாளி’ புகழ் நடித்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அஷ்வின் “எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்குங்க.. கதை கேட்கும்போது பிடிக்கலன்னா தூங்கிடுவேன்.

கிட்டத்திட்ட இதுவரை நான் 40 கதைகள் கேட்டிருக்கேன். அந்த 40 கதைகள் கேட்டு நான் தூங்கிட்டேன். நான் தூங்காத ஒரே ஒரு கதை, இந்த படத்தோட இயக்குநர் ஹரிஹரன் சொன்ன கதை மட்டும் தான். நான் அவர்கிட்ட சொன்னேன், பிரதர் நான் இந்த கதை கேட்கும்போது தூங்கல. அதுனால நான் இந்த படத்துல கண்டிப்பா நடிக்குறேன்” என்று பேசியிருந்தார். அஷ்வின் பேசிய இந்த விஷயம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது, இது தொடர்பாக அஷ்வின் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “என் படத்துக்காக முதல் முறையாக நடைபெறும் மிகப் பெரிய விழா இது என்பதால், எனக்கு பதட்டமாகி விட்டது. ஆகையால், என்ன பேசுவதென்று தெரியாமல் பயத்தில் பேசி விட்டேன். நான் இதுவரை 40 பேரிடம் கதை கேட்கவே இல்லை. நான் நண்பர்களிடம் ஜாலியாக பேசுவது போல் மேடையில் பேசி விட்டேன்” என்று கூறியுள்ளார்.

Share.