போலி ஆவணங்களை தாக்கல் செய்தாரா தனுஷ் !

  • December 1, 2022 / 10:13 AM IST

நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும் தங்களுக்கு வயதாகிவிட்டதால் பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் கோர்ட்டில் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அவர்கள் தெரிவிக்கும் தகவல் உண்மையானது இல்லை, எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

கதிரேசன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த குற்றவியல் சீராய்வு மனுவில், ” நடிகர் தனுஷ் என் மகன் என நான் உரிமை கோரி தொடர்ந்த வழக்கில் தனுஷ் தரப்பிலிருந்து போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தனுஷ் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடக் கோரி மதுரை 6-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். என் வழக்கை நீதித்துறை நடுவர் தள்ளுபடி செய்தார். நடிகர் தனுஷ், இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் என்ற முடிவுக்கு உயர் நீதிமன்றம் வரவில்லை. தனுஷ் தரப்பு ஆவணங்களில் போலி ஆவணங்கள் இருப்பதாக உயர் நீதிமன்றம் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து தனுஷின் பிறப்புச் சான்றிதழின் உண்மை தன்மையை அறிய சான்றிதழை மதுரை மாநகராட்சிக்கு கீழ் நீதிமன்றம் அனுப்பியது. அதன் முடிவு வருவதற்குள் எனது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

எனவே, போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது தொடர்பாக தனுஷ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த என் மனுவை தள்ளுபடி செய்து கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து என் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை 6-வது நீதித்துறை நடுவர் மன்றம் சார்பில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வருகிற டிசம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus