இயக்குனர் பாலா என்றாலே வித்யாசமான கதை களத்தை கொண்ட படங்களை தருபவர் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். இவரது இயக்கத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் இவருடன் பணிபுரிவது மிகவும் கடினம் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்கள்.
1999ஆம் வருடம் வெளிவந்த “சேது” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பாலா பழனிச்சாமி. இந்த படத்தை அவரே எழுதி, இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் விக்ரம் நடித்திருந்தார். இதில் விக்ரமின் சிறந்த நடிப்பு இயக்குனர் பாலாவையே சேரும். அவ்வளவு புதிதான கதைகளம், மனதை உருக்கும் காட்சிகளைக் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து பாலா நந்தா, பிதாமகன்,நான் கடவுள், அவன் இவன், பரதேசி,தாரை தப்பட்டை, நாச்சியார் என பல மாறுபட்ட கதைகளை கொண்ட திரைப்படங்களை தமிழ் திரையுலகிற்கு தந்துள்ளார்.
இவரது இந்த படங்களில் நடித்த அனைத்து நடிகர்களுமே இவருடன் நடித்தது தங்களுக்கு சிறந்த மற்றும் கடினமான அனுபவம் என்று கூறியிருக்கிறார்கள். அவ்வளவு எளிதில் தன் நடிகர்களை பாராட்டாத இந்த இயக்குனர் ஒரு நேர்காணலில், “நான் கடவுள்” படத்தில் நடித்த நடிகை பூஜாவை பாராட்டியுள்ளார்.
“இந்த படத்தில் கண் பார்வையற்ற பெண்ணாக பூஜா தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பார்வையற்றவராக தெரிவிக்க கண்ணில் லென்ஸ் வைத்தபின் நிஜமாகவே கண் தெரியாது இருப்பினும் காட்சிகளை அவ்வளவு துல்லியமாக நடித்துக் கொடுத்தார். இவர் கடின உழைப்பாளி. இருப்பினும் அவரால் சிறந்த நடிகராக வலம் வர முடியவில்லை என்பது வருத்தமளிக்க கூடியதாகவே இருக்கிறது”என்றிருக்கிறார் பாலா
இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் “நாச்சியார்”. 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் நடிகை ஜோதிகா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் நடித்திருந்தார்கள். ரசிகர்களின் பாராட்டுக்களை இந்த படம் குவித்தது.