இந்த உலகம் சிரிக்கலாம்… மக்கள் உன்னை “ஜீனியஸ்” என்பார்கள்
May 20, 2020 / 03:51 PM IST
|Follow Us
இயக்குநர் செல்வராகன் தனது 14 வயதில் அனுபவித்த துயரங்களுக்கு தற்போது எழுதியுள்ள கடிதம் அனைவரது கண்களையும் கசிய வைத்துள்ளது. ரசிகர்கள் செல்லமாக அவரை ஜீனியஸ் என்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தனக்கென ஒரு பாணியை அமைத்துள்ளார் செல்வராகவன். இவர் பெயரை சொன்னால் ரசிகர்களுக்கு
இவர் இயக்கிய படங்களை பேசி சிலாகிப்பார்கள். இப்படியொரு இயக்குநர் தமிழ் சினிமாவின் புது அவதாரம் தான்.
இவரது படங்களை கொண்டாடி மகிழும் ரசிகர்கள், பல வருடங்களை கடந்து தற்போது தியேட்டரில் ரீ-ரிலீஸ் செய்தாலும் பார்ப்பதற்கு தியேட்டர் முழுக்க ரசிகர் கூட்டம் நிறைகிறது.
இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்து அதோடு தான் அனுபவித்த துயரங்களை, உருக்கமாக எழுதியுள்ளார். அதில், தனது சிறு வயதில் இருக்கும் புகைப்படத்திற்கு தற்போது அவர் அறிவுரை வழங்குவதுபோல அந்த பதிவு எழுதப்பட்டுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது, “அன்புள்ள செல்வா (வயது 14), உனது தோற்றத்தை பார்த்து, உன்னுடைய ஊனத்தை பார்த்து, ஒரு கண் இல்லாததை பார்தது இந்த உலகம் சிரிக்கலாம். நீ எங்கு சென்றாலும் உன்னை மக்கள் வித்தியாசமாக பார்க்கலாம் அல்லது கேலி செய்யலாம். ஒவ்வொரு இரவும் அதை நினைத்து கண்ணீர் விடுவாய்.
சில நேரங்களில் கடவுளைப் பார்த்து கேட்டாய் ‘ஏன் என் கண்ணை பறித்தாய்’ என்று. ஆனால், வருத்தம் வேண்டாம் செல்வா. இன்னும் பத்து வருடங்களில் நீ ஒரு மாபெரும் வெற்றிப்படத்தை எழுதி இயக்க போகிறாய். அது உன்னுடைய வாழ்க்கையை மாற்றிவிட போகிறது. இதே உலகம் அப்போதும் உன்னை பார்த்துக்கொண்டுதான் இருக்கும். ஆனால் உன்னை கேலி செய்வதற்காக அல்ல. அதீத காதலுடன் உன் மீதுகொண்டுள்ள மரியாதை போற்றுதலாய் மாற்றும். அடுத்த பத்து வருடங்களில் உனது படைப்பில் உருவான படங்கள் தமிழ் சினிமா வரலாற்றில் ட்ரெண்ட் செட்டிங் கல்ட் கிளாசிக் படங்களாக இருக்கும்.
மக்கள் அனைவரும் உன்னை ‘ஜீனியஸ்’ என அழைப்பார்கள். மக்கள் உன்னுடைய சிறுவயதில் உனக்கு நேர்ந்த துயரம் நிறைந்த அந்த கண்களை பார்க்கமாட்டார்கள். அது உன்னுடைய இளமை பருவம் முழுவதும் பயமுறுத்தி வந்திருக்கும். தனது படங்களின் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்றிய ஒரு மனிதனை அவர்கள் பார்ப்பார்கள். எனவே, கடவுள் உன்னிடமிருந்து மதிப்புமிக்க ஒன்றை எடுத்துக் கொண்டால் அதை விட பொக்கிஷம் நிறைந்த ஒன்றை திருப்பித் தருவார். எப்போதும் மகிழ்ச்சியுடன் இரு.
புகைப்படங்களுக்கு சிரித்து பழகு. (நீ சிரிக்கும் போட்டோ ஒன்றை கூட பார்க்க முடியவில்லை). இனி வரும் ஆண்டுகளில் உன்னுடைய புகைப்படங்கள் அதிகம் எடுக்கப்படும். அதனால் தான் சிரிக்க சொல்கிறேன். உன்னை நேசி இயக்குநர் செல்வராகவன் (வயது 45)”. இவ்வாறு செல்வராகவன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.