மீண்டும் சர்ச்சையில் துல்கர் சல்மான்… களத்தில் இறங்கிய சீமான்…!
April 27, 2020 / 07:18 PM IST
|Follow Us
நடிகர் துல்கர் சல்மான் நடித்த படத்தில், தமிழீழத் தலைவர் பிரபாகரனின் பெயர் இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், அக்காட்சிகளை நீக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
மலையாள இயக்குனர் அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் ‘வரனே அவஷ்யமுண்டு’. பெரும் வரவேற்பு பெற்ற இந்தப் படத்தில் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைக்கப்பட்டு படத்திலும் அது பயன்படுத்தப்பட்டுள்ளது. காமெடிக் காட்சிகளாக எடுக்கப்பட்ட இவை தமிழர்களின் மனதை புண்படுத்தும் விதமாகவும், பிரபாகரனை கிண்டல் செய்வது போலவும் அமைந்துள்ளதால், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இதனை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். மேலும் காட்சிகளை நீக்கவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த எதிர்ப்பை தொடர்ந்து துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பதிவில் ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் தனது தரப்பு நியாயத்தை விளக்கி, அதற்கு மன்னிப்பும் கோரியிருந்தார். இந்நிலையில், சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்ப்பு நிலைப்பாட்டின் தீவிரத்தையும் உணர்ந்து படத்திலிருந்து அக்காட்சியை முழுமையாக நீக்கவேண்டும். மேலும், எதிர்காலத்திலும் இவ்வாறு மலிவான காட்சிகள் மூலம் தமிழர்கள், தமிழ்த் தலைவர்களை இழிவுபடுத்திவிடலாம் என்ற சிந்தனையே எழாமல் இருப்பதுதான் நலம் என தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பக்கத்தில் இந்த சர்ச்சை தொடர்பாக வருந்திய துல்கர், தவறு செய்தது நான் அதனால் என்னை பற்றி பேசுங்கள், என்னுடைய தந்தை குறித்து இழிவாக பேசாதீர்கள் என மனம் வருந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.