பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை OTT தளத்தில் வெளியிடுவதற்கு பாரதிராஜா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை OTT தளத்தில் வெளியிடுவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரின் படங்களை இனி திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என அவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். இந்நிலையில் சூர்யாவுக்காக பாரதிராஜா, சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட 30 தயாரிப்பாளர்கள் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைப்பட தயாரிப்பு அதிகம் ரிஸ்க் உள்ள ஒரு துறை. அதில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள். அவர்களில் சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். அவர்கள் ஒரு படத்தை எடுத்து முடித்தாலும் அப்படத்தை வெளியிட யாரும் முன் வருவதில்லை.
அப்படியே வெளியிட்டாலும் அப்படங்களுக்கு திரையரங்கு மற்றும் ஷோ கிடைக்காமல் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்கள். இத்தகைய பிரச்சனைகள் பெரிய நடிகர்கள்-இயக்குனர்கள் படங்களுக்கு அதிகம் இல்லை. இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும். இந்தி, தெலுங்கு மற்றும் பல மொழி திரைப்படங்களை இந்த கொரோனா லாக் டவுன் சூழ்நிலையில் அங்குள்ள தயாரிப்பாளர்கள் அவர்களின் முதலீட்டை எப்படியாவது எடுத்துவிட OTT நிறுவனங்கள் மூலம் முயற்சி செய்து வருகிறார்கள். இவ்வாறு படங்கள் நேரடியாக வெளியிடுவதன் மூலம் திரையரங்கில் வெளியாக காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கையும் குறையும். அவைகள் சரியான முறையில் வெளியாகவும் முடியும்.
இவ்வாறு பல நன்மைகள் விளையக்கூடிய இந்த OTT ப்ரீமியரை தமிழ் சினிமாவில் உள்ள நாம் அனைவரும் வரவேற்று, மேலும் இனி வரவிருக்கும் சூழ்நிலையில் ரிலீஸ் செய்ய சிரமப்பட உள்ள பல சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை OTT நிறுவனங்கள் பிரீமியர் செய்வதற்கும் வாங்க கோர வேண்டும்.மேலும் முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு அப்படத்தை எல்லா விதங்களிலும் வியாபாரம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது என்று தற்போது திரைப்படங்கள் எடுத்துவரும் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தெரிவித்து கொள்கிறோம். திரைப்பட துறை வளமாக இயங்க அனைத்து தரப்பினரும் (தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள்) ஒருங்கிணைத்து பணியாற்ற வேண்டும், முடிவுகளை எடுக்க வேண்டும்.
தனிப்பட்ட எந்த சங்கமும் தன்னிச்சையாக எந்த ஒரு தயாரிப்பாளரையும் பாதிக்கும் முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டு கொள்கிறோம். இந்த கொரோனா லாக் டவுன் முடிந்தவுடன் அனைத்து சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்தாலோசித்து, விவாதித்து, இதற்கான (OTT படங்கள்) வரைமுறைகளை வகுத்து, தமிழ் சினிமா வளமாக செயல்பட, சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டு கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தயாரிப்பாளர்களின் இந்த முடிவால், திரையரங்கு உரிமையாளர்கள் செய்வதறியாமல் திகைத்துள்ளனர். மேலும் வினியோகிஸ்தர்களுடன் இணைந்து அவர்களும் மறுப்பு அறிக்கை விடுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.