எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பிரம்மாண்ட திரைப்படம் தான் “பாகுபலி 1”. ஐந்து வருடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வெளியான முதலே “பாகுபலியை யார் கொன்றார்கள்” என்ற கேள்வி பெரும் ஆர்வமாக ரசிகர்களிடையே பரவியது.
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவானது, அதுமட்டுமின்றி மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை ஆர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது.
இந்த படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார். கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவில் இந்தப் படத்தின் காட்சிகள் வியக்கத்தக்கதாக அமைந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் “பாகுபலி 2” 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இந்தப்படம் 180 கோடி செலவில் எடுக்கப்பட்டது. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை இந்த படம் வெளியீட்டில் பெற்றது. பழங்காலத்தில் வாழ்ந்த சிவகாமி என்ற அரசி பற்றியும், அவள் காப்பாற்றி வந்த குழந்தையை ஒரு கிராமத்தில் இருக்கும் தம்பதியர் எடுத்து வளர்த்தது குறித்தும் கதைக்கரு இந்த படத்தில் நகர்ந்திருக்கும்.
இந்த முதல் பாகத்தில் பிரபாஸ் “சிவுடு” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பின்பு அவர் தந்தைதான் பாகுபலி என்பதை கண்டுபிடிப்பார். இவ்வாறாக கதை விறுவிறுவென்று நகரும். இறுதியில் பாகுபலியை யார் கொன்றார்கள் என்ற கேள்வியுடன் இந்த படத்தின் முதல் பாகம் முடிவடைந்தது, ரசிகர்களிடையே அடுத்த பாகத்திற்கான ஆர்வத்தை தூண்டியிருந்தது.
இவ்வளவு பிரமாண்டமான இந்த திரைப்படம் வெளியாகி இன்றோடு 5 வருடங்களை நிறைவு செய்கிறது. இந்தப் படத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு நடிகர்களும், படக்குழுவினரும் இந்த படத்தில் நடித்தது அவர்களுக்கு சிறந்த மற்றும் புதிய அனுபவத்தை தந்தது என்றும் இவ்வாறான கதாபாத்திரங்களில் தங்களால் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை இந்தபடம் தந்தது என்றும் கூறுகிறார்கள்.