“அந்த இயக்குநர் யாரென்றே எனக்கு தெரியாது”… ‘அன்புச்செல்வன்’ பட போஸ்டரை பார்த்து ஷாக்கான கெளதம் மேனன்!

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் கெளதம் மேனன். இப்போது கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசனின் ‘வெந்து தணிந்தது காடு’, வருணின் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’, விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இது தவிர கெளதம் மேனன் நடிப்பில் விஷ்ணுவின் ‘FIR’, சிலம்பரசனின் ‘பத்து தல’, சாண்டியின் ‘3 : 33’, ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘செல்ஃபி’ என நான்கு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், ஏ.வினோத் குமார் என்பவரின் இயக்கத்தில் இயக்குநர் கெளதம் மேனன் ‘அன்புச்செல்வன்’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளதாக குறிப்பிட்டு, அப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸை இன்று காலை நடிகர் விஷ்ணு விஷாலும், இயக்குநர் பா.இரஞ்சித்தும் ட்விட்டரில் வெளியிட்டனர்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஏனெனில், கெளதம் மேனன் இயக்கிய இரண்டாவது படமான ‘காக்க காக்க’-வில் சூர்யா ‘அன்புச்செல்வன்’ என்ற போலீஸ் ரோலில் நடித்து மாஸ் காட்டியிருந்தார். அந்த கேரக்டர் பெயரில் கௌதமே போலீஸாக நடிக்கப்போகிறார் என்ற செய்தி வந்தவுடன் அவரது ரசிகர்கள் குஷியாகி விட்டனர்.

தற்போது, இப்படம் தொடர்பாக கெளதம் மேனன் ட்விட்டரில் “இந்த செய்தி என்னை ஷாக்காகியுள்ளது. இந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்க நான் ஒப்பந்தம் ஆகவே இல்லை. போஸ்டரில் குறிப்பிட்டிருக்கும் இயக்குநர் யாரென்றே எனக்கு தெரியாது, அவரை நான் நேரில் சந்தித்தது கூட இல்லை. ஆனால், இப்படத்தின் தயாரிப்பாளர், பிரபல இயக்குநர் மற்றும் நடிகரை வைத்து இதனை வெளியிடச் செய்திருப்பது ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு” என்று கூறியுள்ளார்.

Share.