கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் மற்றும் பிரேமலதா உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!
September 29, 2020 / 07:35 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த். 1979-ஆம் ஆண்டு வெளியான படம் ‘இனிக்கும் இளமை’. இது தான் விஜயகாந்த் அறிமுகமான முதல் படமாம். ஆனால், இதில் இவர் வில்லன் ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு ‘அகல் விளக்கு’ என்ற படத்தில் தான் விஜயகாந்த் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார். அடுத்ததாக 1981-ஆம் ஆண்டு வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் விஜயகாந்திற்கு மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
அதன் பிறகு இவருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. விஜயகாந்தின் 100-வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ 1991-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்தார். அதன் பிறகு ‘உளவுத்துறை’ 125-வது படமாகவும், ‘அரசாங்கம்’ 150-வது படமாகவும் விஜயகாந்திற்கு அமைந்தது. ‘அரசாங்கம்’ படத்துக்கு பிறகு ‘மரியாதை, எங்கள் ஆசான், விருதகிரி’ ஆகிய படங்களில் நடித்தார். 1990-ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை விஜயகாந்த் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி, நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துவிட்டார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிற்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக மியாட் மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் “தேமுதிக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி கோவிட் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, நோய் தொற்று உறுதியாகி சென்னை மியாட் மருத்துவமனையில் செப்டம்பர் 29-ஆம் தேதி அன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்குழுவின் கண்காணிப்பில் உள்ளார். திருமதி. பிரேமலதா விஜயகாந்தின் முதல்நிலை பரிசோதனைக்குப் பின் தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் கழக பொதுச்செயலாளருமான திரு. விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது. நோய்த்தொற்றுக்கான அறிகுறி இல்லை. தொடர் மருத்துவச் சேவைகளினால் அவர் நல்ல முன்னேற்றமடைந்திருக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.