பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்டு ‘இரண்டாம் குத்து’ இயக்குநர் வெளியிட்ட அறிக்கை!
October 12, 2020 / 12:33 PM IST
|Follow Us
தமிழில் இப்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து – பார்ட் 2, முருங்கக்காய், பல்லு படாம பாத்துக்க, முருங்கைகாய் சிப்ஸ்’ என நான்கு அடல்ட் காமெடி ஜானர் படங்கள் உருவாகி கொண்டிருக்கிறது. இதில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து – பார்ட் 2’ படத்தை இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் தான் இயக்கி, ஹீரோவாகவும் நடித்துள்ளார். படத்தில் முக்கிய ரோல்களில் கரீஷ்மா, ஆக்ருதி, மீனாள், ஷாலு ஷம்மு, ரவி மரியா, சாம்ஸ், மொட்ட ராஜேந்திரன், ‘லொள்ளு சபா’ மனோகர் – சுவாமிநாதன், ‘பிக் பாஸ்’ டேனி மற்றும் பலர் நடித்துள்ளனர். பார்ட் 1 ஹிட்டடித்ததால், பார்ட் 2-வுக்கு எக்ஸ்பெக்டேஷன் அதிகமாக இருக்கிறது. சமீபத்தில், இந்த பார்ட் 2-விற்கு ‘இரண்டாம் குத்து’ என டைட்டில் வைக்கப்பட்டது.
படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை நடிகர் ஆர்யா ட்விட்டரில் ரிலீஸ் செய்தார். இது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில் “இரண்டாம் குத்து என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலைகொள்கிறேன். இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா?? அவர்கள் இதைக் கண்டிக்க மாட்டார்களா? அவர்கள் கண்டிப்பார்களோ இல்லையோ நான் இங்கிருக்கும் மூத்தவர்களில் ஒருவன் என்ற முறையில் கண்டிப்பேன். இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது எனக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் கிடுக்கிப் பிடி வேண்டும் என அரசையும் சென்சார் போர்டையும் வலியுறுத்துகிறேன்” என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ‘இரண்டாம் குத்து’ படத்தின் இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் ட்விட்டரில் இயக்குநர் பாரதிராஜா – நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் கூட்டணியில் 1981-ஆம் ஆண்டு வெளியான ‘டிக் டிக் டிக்’ படத்தின் ஸ்டில்லை ஷேரிட்டு “1981-ஆம் ஆண்டு ‘டிக் டிக் டிக்’ படத்துல இதை பார்த்து கூசாத கண்ணு, இப்போ கூசிருச்சோ?” என்று பதிவிட்டிருந்தார். இதற்கு திரையுலகினரும், ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது, இதற்காக வருத்தம் தெரிவித்து இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் “‘இரண்டாம் குத்து’ படத்தை இயக்கி, நடித்துள்ளேன். அதன் போஸ்டர்கள், டீஸருக்கு இயக்குநர் பாரதிராஜா அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையை படித்துவிட்டு வந்த கனத்தின் வெப்பத்தில், எனது ட்விட்டர் பதிவில் ஒரு ட்வீட் போட்டுவிட்டேன். அது அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்தது. அதற்குப் பிறகு நாம் அவசரத்தில் இதை செய்திருக்கக் கூடாது என்று மனம் கூறியது. ஆகவே, நான் போட்ட ட்வீட்டிற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர் பாரதிராஜா அவர்கள். அவருடைய சாதனைகளில் 1 சதவீதமாவது நாம் செய்துவிட மாட்டோமா என்று பலரும் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு இயக்குநர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா வழிகாட்டியாக இருந்திருக்கிறார், இருக்கிறார், எப்போதும் இருப்பார். அவருடைய அறிக்கைக்கு நான் அவ்வாறு எதிர்வினையாற்றி இருக்கக்கூடாது. இதற்கு அடுத்து வரும் போஸ்டர்கள், அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.