நடன இயக்குனராக இருந்து, பின்பு நடிகராக மாறி, பின்பு இயக்குனராக மாறி தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் ராகவாலாரன்ஸ். இவர் 1989ஆம் வருடம் டி.ஆர்.ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த “சம்சார சங்கீதம்” படத்தில் ஒரு பாடலில் ஆடியது மூலம் தன் திரையுலக பயணத்தை தொடங்கினார்.
இவர் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்ததற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிபாரிசு செய்தது தான் காரணம் என்று லாரன்ஸ் அடிக்கடி கூறுவார். அதன்பின் பிரபுதேவா மாஸ்டருடன் இணைந்து நடன கலைஞர்களுடன் ஒருவராக ஆடிவந்தார் லாரன்ஸ். ஷங்கர் இயக்கத்தில் 1993-ஆம் வருடம் வெளிவந்த “ஜென்டில்மேன்” திரைப்படத்தில் ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே’ என்ற பாடலில் பிரபுதேவா கோரியோகிராபியில் ஆடியிருப்பார்.
பின் 1999ஆம் வருடம் தெலுங்கு படமான “ஸ்பிட் டான்ஸர்” படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார் லாரன்ஸ். இதை தொடர்ந்து தமிழில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த லாரன்ஸ் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த “அற்புதம்” படத்தில் நடிகராக அறிமுகமானார்.
எனினும் அவரது படங்கள் பெரிதாக பேசப்படாத நிலையில், 2007 ஆம் ஆண்டு “முனி” என்ற திரில்லர் திரைப்படத்தை இயக்கி நடித்தார் லாரன்ஸ். இந்தப் படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கி நடித்துள்ளார்.
இவர் தற்போது “காஞ்சனா” என்ற தமிழ் படத்தின் இந்தி ரீமேக்கான “லக்ஷ்மி பாம்” திரைப்படத்தை நடிகர் அக்ஷய் குமாரை வைத்து இயக்கிவருகிறார். கொரோனா லாக்டவுனுக்கு முன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிரபுதேவா லாரன்ஸை கண்டு வந்துள்ளார்.
தற்போது லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் பிரபுதேவாவுடன் “ஜென்டில்மேன்” திரைப்படத்தின் போது எடுத்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு “பிரபுதேவா மாஸ்டர் உடனான ஸ்வீட் மெமரி” என்று குறிப்பிட்டுள்ளார்.