“ரஜினி சார் சொன்ன கரெக்ஷனால் கதையே மாறிவிட்டது”… ‘லிங்கா’ ஃப்ளாப்பானது குறித்து பேசிய கே.எஸ்.ரவிக்குமார்!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.

இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்க உள்ளார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம்.

ரஜினி – இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் ‘லிங்கா’. இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் ஃப்ளாப்பானது. தற்போது, இது குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “லிங்கா திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் முதலில் வேற மாதிரி இருந்தது. படத்தின் பாடல் காட்சியின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, ரஜினி சாருக்கு ஃப்ளாஷ்பேக்கில் வரும் லிங்கேஸ்வரன் கேரக்டரின் காட்சிகளை எடிட் செய்தவரை காண்பித்தேன்.

அவருக்கு அந்த கேரக்டரின் காட்சிகள் மிகவும் பிடித்துப்போனதால், அதில் எதையும் தூக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். மேலும், பேரன் லிங்காவின் காட்சிகளிலும் மாற்றம் செய்யுமாறு சொன்னார். எனக்கும் எனது உதவி இயக்குநர்களுக்கும் அதில் உடன்பாடில்லை. இருப்பினும் ரஜினி சார் சொன்னதாலும், படம் அவரின் பிறந்தநாளுக்கு கண்டிப்பாக ரிலீஸ் செய்யவேண்டும் என்று அறிவிக்கப்பட்டதாலும் வேறு வழியின்றி பணியாற்றி படத்தை முடித்தோம்” என்று கூறியுள்ளார்.

Share.