திரையரங்குகளில் 100% ஆடியன்ஸ் அமர தமிழக அரசு அனுமதி கொடுத்திருப்பது விதி மீறல் – மத்திய உள்துறை அமைச்சகம்!
January 7, 2021 / 10:57 AM IST
|Follow Us
‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் (50% ஆடியன்ஸ்) திரையரங்குகளை திறக்கவும், ஷூட்டிங் எடுக்கவும் அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. இருப்பினும் டாப் ஹீரோக்களின் படங்கள் எதுவும் தியேட்டரில் ரிலீஸாகவில்லை.
விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தை பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 13-ஆம் தேதியும், சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தை ஜனவரி 14-ஆம் தேதியும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். சமீபத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விஜய் நேரில் சந்தித்து திரையரங்குகளில் 100% ஆடியன்ஸ் அமர அரசாங்கம் அனுமதி கொடுப்பது தொடர்பாக பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் வெளியிட்டிருந்த அறிக்கையிலும் “அரசாங்கம் கடைகள், மால்கள், கடற்கரை என எல்லாமே முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டன.
திரையரங்குகள் முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டாலொழிய அந்த பழைய நிலை வராது. வசூல் நஷ்டமே ஏற்படும். அரசும் தயைகூர்ந்து 100% இருக்கைகளுக்கு அனுமதி தந்து, பாதுகாப்பு விதிகளை அதிகரித்து, திரையரங்க உரிமையாளர்களையும், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நல்ல உத்தரவை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். அதன் பிறகு கடந்த திங்கட்கிழமை, திரையரங்குகளில் 100% ஆடியன்ஸ் அமர தமிழக அரசு அனுமதி கொடுத்தது. இந்நிலையில், திரையரங்குகளில் 100% ஆடியன்ஸ் அமர தமிழக அரசு அனுமதி கொடுத்திருப்பது விதி மீறல் என்றும், அந்த அனுமதியை திரும்ப பெற வேண்டுமென்றும் தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.