“எனது திருமணம் குறித்து பரவி வரும் தகவல் உண்மையல்ல”… வீடியோ மூலம் விளக்கமளித்த நித்யா மேனன்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் நித்யா மேனன். நித்யா மேனன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான முதல் ஆங்கில படம் ‘தி மன்கி ஹூ க்னியூ டூ மச்’. இதனைத் தொடர்ந்து ‘7 O’ க்ளாக்’ என்ற கன்னட படத்தில் அனு என்ற ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு 2008-ஆம் ஆண்டு மலையாளத்தில் ரிலீஸான ‘ஆகாஷ கோபுரம்’ படத்தில் ஹீரோயினாக நடித்தார் நித்யா மேனன்.

நித்யா மேனனுக்கு தமிழ் திரையுலகில் என்ட்ரியாக முதல் படமாக அமைந்தது ‘180’. அந்த படம் நித்யா மேனனின் நடிப்புக்கு லைக்ஸ் போட வைத்தது. ‘180’ படத்துக்கு பிறகு நடிகை நித்யா மேனனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, 24, முடிஞ்சா இவன புடி, இருமுகன், மெர்சல், சைக்கோ’ என தமிழ் படங்கள் குவிந்தது.

நடிகை நித்யா மேனன் மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது இவர் நடிப்பில் மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், நித்யா மேனன் பிரபல மலையாள நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும், மிக விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் திரையுலகில் தண்டோரா போடப்பட்டு வந்தது. தற்போது, இது தொடர்பாக நித்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் “எனது திருமணம் குறித்து பரவி வரும் தகவல் உண்மையல்ல. வதந்தியே” என்று கூறியுள்ளார்.

Share.