சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் சித்ரா. இவர் ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக சின்னத்திரைக்குள் என்ட்ரியானார். ‘மக்கள் டிவி’யில் ஒளிபரப்பான ‘சட்டம் சொல்வது என்ன?’ என்ற நிகழ்ச்சி தான் சித்ரா தொகுத்து வழங்கிய முதல் நிகழ்ச்சி.
அதன் பிறகு மக்கள் டிவியில் ‘நொடிக்கு நொடி அதிரடி, ஊர் சுற்றலாம் வாங்க’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பின், ஜெயா டிவியில் ஒளிபரப்பான ‘மன்னன் மகள்’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். ‘மன்னன் மகள்’ சீரியலுக்கு பிறகு சன் டிவியில் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ (சீசன் 3), விஜய் டிவியில் ‘சரவணன் மீனாட்சி’ (சீசன் 2), ஜீ தமிழில் ‘டார்லிங் டார்லிங்’, கலர்ஸ் தமிழில் ‘வேலுநாச்சி’ போன்ற டிவி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சித்ரா.

இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்தார் சித்ரா. இந்நிலையில், நேற்று இரவு ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த சித்ரா இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. சித்ராவின் தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். சமீபத்தில், பிரபல தொழிலதிபர் ஹேமந்த் ரவியை சித்ரா திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இவர்களின் திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

