லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்த திரைப்படம் “கைதி”. இந்த திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி வேடத்தில் பாலிவுட்டில் அஜய் தேவ்கான் நடிக்கவுள்ளதாகவும் செய்தி வந்துள்ளது. அஜய்தேவ் கானுக்கு தமிழ் ரீமேக் படங்களில் நடிப்பது இது தொடர்ந்து நான்காவது முறை.
தமிழ் படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்ட சில தமிழ் படங்களை இப்போது பார்க்கலாம்!
1. காக்க காக்க – FORCE (போர்ஸ்)
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2004ஆம் வருடம் வெளிவந்த திரைப்படம் “காக்க காக்க”. இதற்கு முன்னரே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் “மின்னலே” படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. “காக்க காக்க” திரைப்படம் பாலிவுட்டில் “போர்ஸ்” என்ற பெயரில் நிஷிகாந்த் காமத் இயக்கத்தில் 2011ம் வருடம் வெளியிடப்பட்டது. ஜான் ஆபிரகாம் மற்றும் ஜெனிலியா நடித்திருந்தார்கள். இந்தப் படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் அடித்தது.
2. ஆயுத எழுத்து- யுவா
2004ஆம் வருடம் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “ஆயுத எழுத்து”. இந்த படத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த் ஆகியோர் நடித்திருந்தார்கள். பாலிவுட்டில் “யுவா” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இந்தப் படத்தை அனுராக் கஷ்யப் கோ-ரெட் செய்திருந்தார். சூர்யா வேடத்தில் அஜய் தேவ்கான் இந்த படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
3.சிங்கம் – சிங்கம்
2010ஆம் வருடம் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “சிங்கம்”. இந்தப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிகர் சூர்யா நடித்திருப்பார். இந்த படம் சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3 என்று மூன்று பாகங்களாக தமிழில் வெளிவந்தது. 2011 ஆம் ஆண்டு ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஹிந்தியில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது. அஜய் தேவ்கான் சூர்யா இடத்தில் போலீசாக நடித்திருந்தார். காஜல் அகர்வால் அஜய்தேவ் கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சிங்கம் 2 படம் சிங்கம் ரிட்டன்ஸ் என்று மீண்டும் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டது.
4. போக்கிரி – Wanted(வான்டட்)
தளபதி விஜய் நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் 2007ஆம் வருடம் வெளிவந்த திரைப்படம் “போக்கிரி”. இந்தப் படம் தெலுங்கு படமான போக்கிரியின் ரீமேக் ஆகும். இந்தப் படத்தை தெலுங்கு தமிழ் ஆகிய மொழிகளில் பிரபுதேவா தான் இயக்கியிருந்தார்.அவரே பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து போக்கிரி ரீமேக் செய்தார். இந்த படம் ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. போனிகபூர் இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்தியிலும் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
5. கஜினி – கஜினி
ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் “கஜினி”. இந்த படத்தை முருகதாஸே இந்தியில் இயக்கி ரீமேக் செய்தார். சூர்யா வேடத்தில் பாலிவுட்டில் அமீர்கான் நடித்திருந்தார். கதைக்காகவும் நடிப்பிற்காகவும் பல பாராட்டுகளை பாலிவுட்டில் பெற்ற இந்த திரைப்படம், ஒரு கேமாகவும் வெளியிடப்பட்டது. 100 கோடி வசூலை தாண்டிய முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை கஜினி பெற்றது.
6. துப்பாக்கி – Holiday (ஹாலிடே)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் “துப்பாக்கி”. இந்தப் படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்து முருகதாஸ் தனது இரண்டாவது இந்திப் படத்தை இயக்கினார்.”ஹாலிடே” படத்தில் தளபதி விஜய் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்திருந்தார். இந்த படம் ஹிந்தியில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது.