ஆரம்பமானது ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ ஷூட்டிங்… முக்கிய ரோலில் நடிக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன்!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.

இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார்.

‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் ரஜினிக்கு மகளாக பிரியங்கா மோகனும், மிக முக்கிய ரோலில் கன்னட நடிகர் ஷிவராஜ்குமாரும் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 10-ஆம் தேதி) முதல் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த ஷெட்யூலில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, ரெடின் கிங்ஸ்லி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கவுள்ளனர். ரஜினி வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் ஷூட்டிங்கில் கலந்து கொள்வாராம். படத்தை அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Share.