“என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்”… ரசிகர்கள் போராட்டத்தை தொடர்ந்து ரஜினி அறிக்கை!
January 11, 2021 / 01:53 PM IST
|Follow Us
ரஜினிகாந்த் கடந்த ஆண்டு (2020) டிசம்பர் 29-ஆம் தேதி ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில் “இந்த கொரோனா காலத்தில் மக்களை சந்தித்து, பிரச்சாரத்தின் போது என் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என்கூட வந்து என்னுடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள் பல சிக்கல்களையும் சங்கடங்களையும் எதிர்கொண்டு, மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களை சந்திக்க நேரிடும். என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.
ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும், நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள்” என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் சிலர் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தற்போது, ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு… நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருந்தும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து, சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.
கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வரவேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள்! வளர்க தமிழ்நாடு!! ஜெய்ஹிந்த்!!!” என்று கூறியுள்ளார்.