“வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை”… ரஜினி வெளியிட்ட அறிக்கை!
July 12, 2021 / 03:26 PM IST
|Follow Us
சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் கடந்த ஆண்டு (2020) தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி எந்த இயக்குநருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பின், இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் தான் ரஜினி நடிக்கப்போகிறார் என்று உறுதிசெய்யப்பட்டது. இந்த படத்தை தயாரிப்பது ‘சன் பிக்சர்ஸ்’ என்பதால், படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரஜினியின் ‘முத்து’ பட வசனம் போல் எப்போ வரும்னு சொல்லாம, வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்தது.
படத்தின் டைட்டிலே ‘அண்ணாத்த’ என்று திடீரென அறிவித்து விட்டார்கள். மேலும், படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடிக்கிறது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில், இப்படத்தை இந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனமே ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், இன்று ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், என்ன வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது அதை விளக்கவேண்டியது என்னுடைய கடமை.
நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும் பல பதவிகளையும், பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம். கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள்! வளர்க தமிழ் நாடு!! ஜெய்ஹிந்த்!!!