கமல் தொகுத்து வழங்கப்போகும் ‘பிக் பாஸ் 5’… ரஜினி பட வில்லனும் ஒரு போட்டியாளராமே!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். சமீபத்தில், ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5-க்கான பணிகள் துவங்கப்பட்டது. இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

இப்போது, சீசன் 5-க்கான ‘பிக் பாஸ்’ வீட்டின் செட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 3 வாரங்களில் இந்த நிகழ்ச்சியின் 5 ப்ரோமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியை வருகிற அக்டோபர் 3-ஆம் தேதியிலிருந்து ஆரம்பிக்க விஜய் டிவி ப்ளான் போட்டுள்ளது. இந்நிலையில், பிரபல நடிகர் ‘நிழல்கள்’ ரவி மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “பிக் பாஸ் 5-ல கலந்து கொள்ள என்னை அணுகினார்கள். ஆனால், நான் கலந்து கொள்கிறேனா? இல்லையா? என்பது சஸ்பென்ஸ். அது பற்றி வெளியே சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க” என்று கூறியுள்ளார். இவர் ரஜினியின் ‘அருணாச்சலம், அண்ணாமலை’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.